விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் உள்ளூர் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே பெங்களூருவில் இன்று அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி குஜராத் அணியை எதிர்த்து ஆடியது.
இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் பிரியங்க் பான்ச்சல் 3 ரன்கள், கேப்டன் பார்திவ் பட்டேல் 13 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அதன்பின்பும் குஜராத் பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையைக் கட்டியதால் அந்த அணி 40 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துருவ் ராவல் 40, அக்ஸர் பட்டேல் 37 ரன்களை எடுத்தனர். தமிழ்நாடு தரப்பில் எம்.மொகம்மது 3 விக்கெட்டுகளையும், ஆர். அஸ்வின், முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், டி. நடராஜன், பாபா அப்ரஜித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின்னர் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் ஓப்பனர் முரளி விஜய் 3 ரன்களிலும், பாபா அபராஜித் 6 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். எனினும் பின்னர் முகுந்த் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்திருந்தபோது முகுந்த் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் விஜய் சங்கரும் 6 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 47 ரன்கள் (47 பந்துகள் 5 பவுண்டரி) எடுத்து ஜெய்விர் பர்மர் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணி சற்று தடுமாறியது.
இருப்பினும் அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் – ஷாருக்கான் இணை குஜராத் அணியின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டது. இதனால் தமிழ்நாடு அணி 39ஆவது ஓவரிலேயே 5 விக்கெட்டை மட்டும் இழந்து 181 ரன்களை எடுத்து குஜராத் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஷாருக்கான் 56 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமிழ்நாடு அணி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை எதிர்கொள்கிறது.
SEALED WITH A SIX!
A tense finish, but Shahrukh (56*) and Washington (27*) guide TN home against Gujarat!
Karnataka awaits in the finals! #VijayHazare #TNvGUJ pic.twitter.com/06IPCsXJTD
— TNCA (@TNCACricket) October 23, 2019