வீட்டில் 137 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராம அணைக்கட்டு பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுவராஜ் என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவரின் வீட்டில் 137 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக யுவராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் யுவராஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.