உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து வியட்நாம் வென்றது குறித்து இந்த செய்தி தொகுப்பு அலசுகின்றது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை தைவான், தென் கொரியா, சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகள் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்றதாக நாம் அறிந்திருப்போம். தற்போதைய சூழ்நிலையில் அந்த நாடுகள் தான் ஊரடங்கை தளர்த்த தயாராகிக் கொண்டிருக்கின்றன. கொரோவாவை உலகமே வியக்கும் வகையில் கையாண்ட வியட்நாம் குறித்து நாம் யாரும் பேசவில்லை. மேற்கூறிய நாடுகள் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிர் இழப்புகளை, பறி கொடுத்து தான் வெற்றி பெற்றார்கள்.
ஒருவர் கூட இறக்கவில்லை;
வியட்நாம் மக்கள் கொரோனாவுக்கு உயிரிழந்ததற்கான எந்த ஒரு சாத்தியக் கூறு மில்லை. வியட்நாமில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.மே 8ம் தேதி நிலவரப்படி ஜெர்மனியில் 7,392 பேரும், சிங்கப்பூரில் 20 பேரும், தைவானில் 6 பேரும், தென்கொரியாவில் 256 பேரும் உயிரிளந்தாலும் வியட்நாமில் ஒருவர்கூட கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
அதற்கு அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் வேகமும், விவேகமும் தான் காரணம் என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன.அமெரிக்காவின் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் இது சீனா வைரஸ் என்று வார்த்தை போரை நடத்தி வந்தார். ஆனால் வியட்நாம்க்கு சீனாவைப் பற்றி ஆரம்ப காலத்திலிருந்தே தெரியும். அது சீனாவுடனான போர் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
சீனாவை கண்காணித்தது:
வியட்நாமைச் சேர்ந்த APT32 எனும் சைபர் பாதுகாப்பு நிறுவனம், சீனாவில் புதிய வைரஸ் பரவிவருவதை கண்டறிந்தது. இதனை அறிந்த வியட்நாம் அரசு, உடனடியாக சைபர் பாதுகாப்பு நிறுவனங்களை சீனாவின் அவசர நடவடிக்கை மற்றும் வூகான் நகராட்சியின் செயல்பாடுகளை கண்காணிக்க உத்தரவிட்டது.
அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான fireeye,இதுகுறித்த தகவலை வெளியிட்டது. 2012ஆம் ஆண்டு முதலே வியட்நாமின் APT32 சைபர் தாக்குதலில் ஈடுபடுவதாகவும், சீனா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி சார்ந்த நிறுவனங்களின் ரகசியத்தை அறிய அது செயல்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.
கொரோனவை உறுதி செய்தது:
கொரோனா தொற்று காலத்தில் அமெரிக்காவை போல வியட்நாமும் சமூக வலைதளத்தை உன்னிப்பாக கவனித்து வந்தது. 2019 நவம்பர், டிசம்பர் மாதங்களில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை வியட்நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. சீனாவில் இருக்கும் வியட்நாமை சேர்ந்த மாணவர்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்களிடம் இது குறித்த தகவலை உறுதி செய்த வியட்நாம் அரசு களத்தில் இறங்கியது.
துரித நடவடிக்கை:
சீனாவுடன் 1,281 கிமீ எல்லைப் பரப்பை பகிர்ந்துள்ள வியட்நாமில் கரோனா பரவத் தொடங்கியது. 2020 பிப்ரவரியில் வியட்நாம் அரசு இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க சிறப்பான உத்திகளை வகுத்தது. கம்யூனிச தேசமாக இருந்தாலும், தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் சில நடவடிக்கைகளை வியட்நாம் அரசு மேற்கொண்டது.
விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேன்:
உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே வியட்நாம் தடுப்புப் பணிகளை தொடங்கியது. பிப்ரவரி மாதம் முழுவதும் வியட்நாமுக்கு வரும் விமான பயணிகள் அனைவரும் ஸ்கேன் செய்யப்பட்டனர். தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு பயணிகளின் முழுவிவரங்கள் விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன. 38 டிகிரிக்கு செல்சியஸ்க்கு மேல் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் ஆனால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
7 கோடி பேரில் 288 பேருக்கு கொரோனா:
அதேபோல மக்கள் கூடும் உணவகங்கள், வங்கிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்துப் பகுதிகளிலும் ஸ்கேனிங் செய்யப்பட்டார்கள். மே 8ம் தேதி வரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 4 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. அங்கு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஓருவருக்கு ஏற்பட்ட உடனேயே அவர் வசித்த பகுதிக்கு சீல் வைத்து அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் 9 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் கொரோனா பாதிப்பு 288 நபர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பு:
சீனா போன்ற பிற நாடுகளில் மருத்துவ சோதனை கருவிகளுக்கு கையேந்தாமல் உள்நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களை வைத்து சொந்தமாக சோதனைக் கருவிகளை தயாரிக்க உத்தரவிட்டது வியட்நாம் அரசு. இந்த சோதனை கருவிகள் அமெரிக்க மதிப்பு 25 டாலர் ஆகும். இதனால் ஒன்றரை மணி நேரத்தில் கொரோனா சோதனை முடிவுகளை அறிய முடிந்தது. இதுவும் வியட்நாம் கொரோனா போரில் வெற்றி அடைய ஒரு காரணமாக இருக்கிறது.
வெற்றி பெற்ற வியட்நாம்:
பிப்ரவரி இரண்டாவது வாரம் தொடக்கம் முதலே வெளிநாட்டில் இருந்து திரும்பும் வியட்நாம் மக்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டது. அதை தவற விட்ட நாடுகள் தான் தற்போது கொரோனாவுக்கு அதிக விலையை கொடுத்து வருகின்றனர். மார்ச் மாதம் முதலே குறிப்பிட்ட நகரங்களில் ஊரடங்கு செயல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் வியட்நாம் அரசு தீவிரமாக ஈடுபட்டது. பிரதமர் தொடங்கி அரசியல் தலைவர்கள் என அனைவரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். இப்படி ஒவ்வொரு நடவடிக்கையும் விரைவாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தான் கொரோனா போரில் வியட்நாம் மாபெரும் வெற்றியைக் கண்டது. உலக நாடுகள் அதனை வியந்து பார்க்கின்றன.