பாகிஸ்தான் ராணுவமானது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது அதில் பயணம் மேற்கொண்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனிடையில் விபத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண் சிங் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் பலத்த காயமடைந்த அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது நாடுகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மத்திய அரசுக்கும், முப்படையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் ராணுவமானது இரங்கல் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ராணுவ செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “இந்த விபத்தில் முப்படை தளபதி அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுடைய விலைமதிப்பில்லா உயிர்களின் இறப்புக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் நதீம் ராசா, ஜெனரல் காமர் ஜாவத் பாஜ்வா போன்றோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.