விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் சடலத்தை அம்பேத்கர் சிலை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன்(19). இவர் கடந்த 13ஆம் தேதி சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிவர்மனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரவிவர்மன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் இளைஞரின் உடலை தர்மபுரி சாலையில் அம்பேத்கர் சிலையின் முன்பு வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் குற்றவாளியை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பின்பு ரவிவர்மனின் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.