கார்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் எல்.கே.சி. நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அணு என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் ஓலப்பாளையத்தில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் காரில் ஓலப்பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருப்பூரில் இருந்து வெள்ளகோவிலை நோக்கி வந்த காரும் ராஜ்குமார் சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து மற்றொரு காரில் வந்த திருப்பூர் வளையங்காடு பகுதியில் வசிக்கும் மணிவேல், சேகர், வெள்ளகோவில் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பவரின் மனைவி செல்வி, இவரது மகள் கனிமொழி ஆகியோர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 4 பேரும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.