பாம்பன் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அமராவதி புதூர் பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடல் நடுவே உள்ள பாம்பன் ரோடு பாலத்தில் கார் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து மற்றொருவர் பாலத்தின் நடை பாதையில் விழுந்து பலத்தகாயமடைந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்த போது கடலில் தூக்கி வீசப்பட்டவர் தத்தளித்தபடி கிடந்துள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் உடன் எடுத்து வந்த கயிறு அருகில் கிடந்தது. அதை எடுத்து காவல்துறையினர் அவரை நோக்கி வீசி அவரை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அந்த நபரையும் பாலத்தின் மேல் காயமடைந்து கிடந்தவரையும் உடனடியாக மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடலில் விழுந்தவர் சேதுநகர் பகுதியில் வசிக்கும் முகேஷ் என்பதும் அவருடன் வந்த மற்றொருவர் நாராயணன் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதில் சிகிச்சை பலனின்றி நாராயணன் பரிதாபமாக உயிரழந்தார். மேலும் இவர்கள் இருவரும் பாம்பன் பகுதியில் விசைப்படகுகளை பழுதுபார்ப்பதற்காக வந்த தொழிலாளர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரில் 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாம்பன் காவல்துறையினர் காரை ஓட்டி வந்த கருணாமூர்த்தியை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுவதாவது, “மோட்டார் சைக்கிளில் மோதிய கார் அதிர்ஷ்டவசமாக பாலத்தின் நடைமேடையில் ஏறி, மின்கம்பத்தில் மோதி நின்றுவிட்டது. பாம்பன் பாலத்தில் வருபவர்கள் கடலை ரசிக்க வேண்டும் என்பதற்காக கவனக்குறைவாக வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட நேருகிறது. எனவே பாம்பன் பாலத்தில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.