தமிழகத்தில் சீட்டு விளையாட்டு, லாட்டரி உட்பட சூதாட்டங்கள் நடைபெற ஏற்கனவே தடை உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் ஆன ரம்மி சீட்டு விளையாட அழைப்பு விடுக்கும் வகையில் தொலைகாட்சி வலைதளங்கள் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏராளமானோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் ரம்மி விளையாட்டால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் இருக்கின்றன.
சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் அப்படத்தின் கதாநாயகன். “ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய ஆசையை தூண்டனும்” என ஒருவசனம் பேசுவார். அந்த வசனம் தான் ஆன்லைன் ரம்மியின் அடித்தளம். செல்போன் வைத்திருக்கும் அனைவருமே நீங்க ரம்மி விளையாடி ஜெயிக்கலாம் என ஒரு விளம்பரத்தை பார்த்து இருக்கலாம்.
இந்த விளம்பரத்தைப் பார்த்து கடந்து செல்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். அதில் அப்படி என்னதான் இருக்கிறது என பார்க்க விரும்புகிறவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு மாட்டிக் கொள்பவர்கள் மீள்வதற்கு வழியே இல்லாமல் ஆன்லைன் இரும்பு கதவு அடைக்கப்பட்டு விடுகிறது. முதலில் ஆயிரம் ரூபாய் வைத்து ஆடினால் 500 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அடுத்து 500 ஆடினால் ஆயிரம் கிடைக்கிறது. இப்படியே ஆயிரம், ஒரு லட்சம் என கிடைக்க வைத்து விளையாடுபவர்களின் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் ரம்மி. இறுதியில் அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பிடுங்கி விடுகிறது. அவர்களும் விட்டதை பிடிப்போம் என்று ஓடினாள் அது கடைசியில் கானல் நீராகி விடுகிறது.