வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்றியத்துக்குட்பட்ட கல்லேரிகுப்பம் மற்றும் ரோடு பரமநத்தம் ஆகிய பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு அனிதா சக்திவேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்பின் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதா சக்திவேல் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் அதிகமானவர்கள் வேட்புமனு தள்ளுபடி செய்ததை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகேசன் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு சமரசம் கூறி வேட்பாளர் அனிதா சக்திவேல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சாலையில் பொதுமக்கள் மற்றும் அனிதா சக்திவேல் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு பிறகு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.