மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வள்ளுவப்பக்கத்தில் சேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஷியாம் சுந்தர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுராந்தகம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் சுந்தர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலை அருகில் நண்பர்கள் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது. இதில் ஷயாம் சுந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவருடைய நண்பர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஷியாம் சுந்தர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் மலைப்பாளையம் ஆதிவாசி நகர் கிராம மக்கள் மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலையில் சாத்தம்மை என்ற இடத்தில் குறுகிய வளைவு இருப்பதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் சிவப்பு விளக்கு பொருத்த வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தாசில்தார் பருவதம், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தராஜ் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்த பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.