கனமழையின் காரணமாக வாழை மரங்கள் முறிந்து நாசமானதால் இழப்பீடு வழங்க கோரி விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியில் விவசாயி சாமிநாதன் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் மற்றும் வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளார். மேலும் 1 1/2 ஏக்கரில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனமழை காரணமாக சாமிநாதன் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமானது.
இதுகுறித்து சாமிநாதன் கூறியபோது “கடந்த 13 மாதங்களாக வாழை மரங்களை சாகுபடி செய்ய 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பராமரித்து வந்தேன். இந்நிலையில் இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் காற்றால் முறிந்து நாசமானது. எனவே முறையாக அறுவடை செய்து இருந்தால் 3 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும். ஆனால் வாழை மரங்கள் முறிந்து நாசமானதால் என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோட்டத்தை ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.