கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் திருமழிசை செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் சேரும் சகதியுமாக மாறி இருக்கிறது.
சாதாரண மழைக்கே திருமழிசை காய்கறி சந்தைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மார்க்கெட் முழுவதும் குளம் போல தண்ணீர் தேங்கியதால் தக்காளி உட்பட காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி அழகி விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காய்களை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் இல்லாததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டன் கணக்கான காய்கறிகள் மழை நீரால் பாதிகப்பட்டு அழுகுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வியாபாரிகளின் குற்றச்சாட்டு. திருமழிசை மார்க்கெட்டால் தினசரி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் பல வியாபாரிகள் அங்கு கடைகளை திறக்க முன்வராத நிலையே நீடித்து வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.