வெளிநாட்டுக்கு திமிங்கலத்தின் உமிழ்நீரினை கடத்துவதற்கு முயற்சி செய்த 2 நபர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதிகளில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் முத்துப்பேட்டை அருகிலுள்ள உப்பூர் பகுதியிலிருந்து திமிங்கலத்தின் உமிழ்நீர் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் இளகுமணன் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வெளிநாட்டுக்கு கடத்தபடுவதற்காக 5 கோடி மதிப்பிலான 8 கிலோ எடை கொண்ட திமிங்கலம் உமிழ்நீரை 3 கட்டிகளாக மாற்றி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து திமிங்கில உமிழ்நீரை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றதாக முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன், ஜாகிர், உசேன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து 2 பேரிடமும் குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இலங்கையிலிருந்து திமிங்கலத்தின் உமிழ்நீரினை சிறு கட்டிகளாக மாற்றி கடத்தி வந்து 2 பேரும் முத்துப்பேட்டையில் விற்பனை செய்ததும், அவற்றை வெளிநாட்டுக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் 2 பேரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.