Categories
சென்னை மாநில செய்திகள்

பயன்பாட்டிற்கு வந்த திருமழிசை தற்காலிக சந்தை….. சென்னையில் காய்கறிகள் விலை குறைந்தது!

திருமழிசை தற்காலிக சந்தை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சுமார் 2,000 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட கூடாரகங்கள் அமைக்கப்பட்டு சிமெண்ட் தரைத்தளம், மின் இணைப்புகள் கொடுக்கும் பணியானது நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த சந்தை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்துள்ளார்.

வியாபாரிகளிடம் கடைகள் ஒப்படைக்கும் பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் நள்ளிரவு முதல் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு இன்று செயல்பட தொடங்கியுள்ளது. அனைத்தும் கிருமி நாசினி தெளித்த பிறகே, அனுமதிக்கப்பட்டது. வியாபாரிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கோயம்பேடு சந்தையை போலவே திருமழிசைக்கும் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை தொடங்கியதால் சென்னையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.14, பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.25, பீட்ரூட் ரூ.30, பாகற்காய்-25, கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி – ரூ.25, சுரைக்காய் – ரூ.30க்கு விற்பனையாகிறது. மேலும் திருமழிசை தற்காலிக சந்தையில் இதுவரை 3 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |