தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிக்குஅருகில் உள்ள தோமூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று இவருடைய வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சி பாடி இடத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது, இவர் மீது தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கனகம்மா சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இவருடைய உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான விழுப்புரம் மாவட்டம் பானூர் பகுதியை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மணி என்பவரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.