Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்த மின்அதிகாரி வீடு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாமரை நகர் பகுதியில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருடைய மகன் என்ஜினீயரிங்கும், மகள் கீர்த்தனா குடியாத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராஜசேகரன் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக ராஜசேகரன் தனது குடும்பத்தினருடன் ஜவுளி எடுக்க சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த 7-ஆம் தேதி சென்றுள்ளார்.

இதனால் அவருடைய வீடு பூட்டிக் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனையடுத்து வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜசேகருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ராஜசேகரன் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து பார்த்து வருமாறு கூறியுள்ளார். அவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் திருவண்ணாமலை டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து ராஜசேகரனிடம் கேட்டபோது அவர் தனது மகள் திருமணத்திற்காக வங்கியில் இருந்து 75 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் மனைவியின் நகை ஆகியவற்றை பீரோவில் வைத்திருந்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதனையடுத்து மற்ற 55 பவுன் நகையை துணிப்பையில் வைத்து துணிகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்ததால் அது மட்டும் தப்பியது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |