ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை தெருவை சேர்ந்த சேகர் என்பவர் தான் வசிக்கும் மாடி வீட்டின் தரைத்தளத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்று வசதிக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்தபடி அவருடைய குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூபாய் 70 ஆயிரம் பணம் 3 பவுன் நெக்லஸ் , மோதிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
அப்போது பக்கத்தில் வசிக்கும் ஜவுளிக்கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியம் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் இவர்கள் வைத்திருந்த பை,திருடிய 3 செல்போன்கள் ஆகியவற்றை வீசி விட்டு சென்றனர். இதுகுறித்து சேகர் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை போன்ற தடயங்களை பதிவு செய்தனர். மேலும் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.