திருவாரூரில் வீடு புகுந்து பெண்ணிடம் 1 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செல்லூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த தம்பதியினர் ரங்கராஜ் – விஜயலட்சுமி. விஜயலட்சுமி நேற்று காலை தனது வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் விஜயலட்சுமி கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு கணவர் ரங்கராஜ் அங்கு ஓடி வந்தார்.
ஆனால் அதற்குள் மர்ம நபர் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தங்க சங்கிலியுடன் ஓடிய நபரை துரத்தி சென்றனர். இருப்பினும் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.