சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால் அதுபோன்ற வெடிகுண்டு ஏதும் அங்கு வைக்கப்படவில்லை. அதன்பின் சைபர் கிரைம் காவல்துறையினர் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி பொய் சொல்லிய மர்ம நபரை அவர் அழைத்த போன் நம்பர் வைத்து கண்டுபிடித்தனர். அந்த நம்பர் வடபழனி சேர்ந்த ஒரு பெண் உடையது என்பது தெரியவந்தது.
அப்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, அவரது கணவன் முருகன் மனநிலை சரியில்லாமல் கீழ்ப்பாக்கத்தில் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இந்நிலையில் முருகனை சந்திக்க அவர் மனைவி சென்ற செல்போனை எடுத்து முருகன் போலீசாருக்கு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியுள்ளார். மனைவி தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லாததால் தான் இப்படி முருகன் செய்ததாக தெரிய வந்தது.இதையடுத்து காவல்துறையினர் முருகனை கண்டித்து சென்றனர்.