திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி சேர்ந்தவர் தர்ஷினி வயது 13. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாம் மறந்துபோன நமது பாரம்பரிய இயற்கை உணவுகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தர்ஷினி 40 நிமிடங்களில் 60 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து உலக சாதனை நிகழ்த்தினார்.
வீட்டில் வளரும் மூலிகைகளான ஓமவல்லி, ஆவாரம்பூ ரனகள்ளி, வல்லாரை, மிளகுதக்காளி, மல்லி துளசி, புதினா, வெற்றிலை உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தோசைகள், கம்பு, சோளம், சுண்டல் போன்ற முளைகட்டிய தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வகைகள், நாட்டுச்சக்கரை, தேன் உள்ளிட்ட இனிப்புகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இயற்கை குளிர்பானங்கள், கூழ் வகைகள் உள்ளிட்ட உணவுகள் தர்ஷினியின் சமையல் பட்டியலில் இடம் பெற்றன.
மிகக்குறைந்த வயதில் 40 நிமிடங்களில் 60 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்து உலக சாதனை புத்தகங்களில் தர்ஷினி இடம்பிடித்தார். யுனிவர்சல் அச்சீவர்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தக நிறுவனங்களின் நிர்வாகிகள் பாபு பாலகிருஷ்ணன் மற்றும் கண்ணன் குமாரசாமி ஆகியோர் விருது மற்றும் பதிவுச் சான்றிதழ்களைத் தர்சினிக்கு வழங்கினர்.