பிலிப்பைன்ஸில் சமூகவலைத்தளத்தில் பரவிய வதந்தியை நம்பி தடுப்பூசி செலுத்தும் மையங்களின் முன்பாக குவிந்த பொதுமக்களை அப்புறப்படுத்துவதற்கு அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா பரவலின் காரணத்தால் இன்று முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அறிவித்த அந்நாட்டின் பிரதமர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் அந்நாட்டின் சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவியுள்ளது. அதாவது கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அந்நாட்டில் வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி எதுவுமே கிடையாது என்றும், ஊரடங்கு நேரத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற வதந்தியும் பரவியுள்ளது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள கொரோனா குறித்த விதிமுறைகளை கூட கடைபிடிக்காமல் தடுப்பூசி மையங்களின் முன்பாக குவிந்ததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை அப்புறப்படுத்துவதற்கு அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள்.