இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தின் அண்டை மாநிலம் மற்றும் ஒகிக்ரான் மாறுபாடு முதன் முதலாக கண்டறியப்பட்ட கர்நாடகாவில் தற்போது இந்த பாதிப்பு இரட்டிப்பு மடங்காக அதிகரித்து உள்ளது. ஆரம்ப நிலையில் 2 புதிய பதிப்புகளை மட்டுமே பதிவு செய்திருந்த கர்நாடகாவில் தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வர இருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டத்தின் போது நோய் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் நடத்திய கூட்டத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ம் வரை புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முடிவு செய்துள்ளனர். அந்த அடிப்படையில் கர்நாடக மாநிலம் முழுவதிலும் இந்த 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருகிறது. இதனையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ள ஊழியர்கள் இருக்கும் கிளப்கள் மற்றும் உணவகங்களில் 50% இருக்கை திறனுடன் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிளப்களில் நிகழ்வுகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதேபோன்று பெரிய வளாகங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கர்நாடகாவின் எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோடு போன்ற இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்காக மக்கள் கூட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.