முயல்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக 20 நபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதிகளில் சிலர் முயல்களை வேட்டையாட செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி திண்டுக்கல் வன பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் விஜயகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் காட்டு பகுதியில் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் குப்பம்பட்டி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் என்பது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் முயல்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக வனத்துறையினர் 20 பேருக்கு தலா 750 ரூபாய் என மொத்தம் 15,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் வன விலங்குகளை வேட்டையாட கூடாது என்று கூறி வனத்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.