ஆப்கானிஸ்தானில் சீக்கிய இனத்தவர்களின் கொடியை அந்நாட்டில் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அகற்றிய சம்பவத்திற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பக்சியா என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள தலா சாகிப் குருத்வாராவில் சீக்கியர்களின் புனித கொடி உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் இந்த சீக்கியர்களின் புனித கொடியை அகற்றியதோடு மட்டுமின்றி சீக்கிய சமூகத்தின் தலைவரான நெதன் சிங்கை கடத்தியும் சென்றுள்ளார்கள்.
இதற்கு இந்திய அரசாங்கம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் பஞ்சாப் மாவட்டத்திலுள்ள இந்து கோவிலின் மீது அங்கிருக்கும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி கோயிலில் இருந்த சிலைகளையும் உடைத்துள்ளார்கள். இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும்படி பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது இதுகுறித்து தலைமை நீதிபதி கூறியதாவது, இந்த கோவிலை அப்பகுதி மக்கள் தாக்கியதால் உலக அரங்கில் பாகிஸ்தானின் நெற்பெயர் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.