வணிக வளாகத்தில் நடந்த கத்திக் குத்து சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் மிடில்டன் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நண்பகல் ஒரு மணியளவில் திடீரென ஜாம்பீ கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை அடுத்து அவர் முதல் தளத்தில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை ஐந்து முறை கழுத்து மற்றும் தலை பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவமானது வணிக வளாகத்தில் கூடியிருந்த அனைவரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காயம் ஏற்பட்ட அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவர்கள் அவரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் ஆனால் வெட்டுக்காயங்கள் பலமாக ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை மான்செஸ்டர் நகர போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.