காய்கறி வியாபாரிகள் சாலையில் கடை போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் பழைய பேருந்து நிலையமாக இருந்த இடம் தற்போது மார்க்கெட்டாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மார்க்கெட் வளாகத்திற்குள் கூடுதல் கடைகளை அமைக்க போதுமான இடம் இருந்தாலும் வியாபாரிகள் சிலர் வழிபாதை ரோட்டை ஆக்கிரமித்து காய்கறி கடைகளை அமைத்துள்ளனர். இதனால் சென்னிமலை, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அந்த வழியாக வரமுடியாமல் பேருந்து நிலையத்திற்கு சுத்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை நிருத்தக் கூட வழியில்லாமல் அவதிப்படுகின்றனர்.
இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தினசரி மார்க்கெட் பெருந்துறை பேருந்து நிலையத்தில் இயங்கி வருவதால் பொதுமக்களுக்கு இடையூறுகள் இல்லாமல் இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் அரசு தளர்வுகள் அறிவித்ததையடுத்து தினசரி மார்க்கெட் மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தற்போதுள்ள பேருந்து நிலையத்திற்கு தினசரி மார்க்கெட்டை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.