வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு டவுன் குல்ஜார் 2-வது வீதியில் யூனூஸ் நபில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பங்களாமேடு பகுதியில் கையுறைகள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். இந்நிலையில் யூனுஸ் நபில் தனது குடோனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளிசேரி கிராமத்தில் வசித்து வரும் குடியாத்தம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வேதாச்சலம் என்பவர், தனது கூட்டாளிகளான பேரணாம்பட்டு டவுன் ஆதம்சா தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் முகம்மது பாஷா, மசிகம் கிராமத்தை சேர்ந்த குமரேசன் ஆகியோருடன் சேர்ந்து யூனூஸ் நபிலை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த 400 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து யூனூஸ் நபில் தனது அண்ணன் அதிக் என்பவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குடியாத்தம் ரோடு புத்துக்கோவில் அருகில் நின்றிருந்த வேதாச்சலத்திடம் கேட்ட போது, அதிக்கையும் மிரட்டியுள்ளனர். அதன்பின் சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் யூனூஸ் நபில் கொடுத்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் போன்றோர் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் வேதாச்சலம், அவரது கூட்டாளி ஆட்டோ டிரைவர் முஹமது பாஷா ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு, தலைமறைவாக இருக்கின்ற குமரேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.