பட்டதாரி வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மகாவீர் நகரில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் பி.காம் பட்டதாரி ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகேஸ்வரன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் “கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த முருகேசன் என்பவரது குடும்பத்தினருக்கும், யோகேஸ்வரனுக்கும் இடையே கடந்த 2 வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் இருதரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் யோகேஸ்வரன் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் முருகேசன் குடும்பத்தினரை தீவிரமாக கண்காணித்தனர்.
இதில் முருகேசன் மகன்களான ராஜேஷ், விக்னேஷ், சதிஷ் மற்றும் இவர்களுடைய உறவினரான திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த கர்ணன் ஆகியோருக்கு கொலையில் தொடர்பு இருப்பதை” காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேஷ், விக்னேஷ், சதிஷ் ஆகிய 3 பேரையும் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி அருகே காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பின் திருவெல்லியங்குடி கிராமத்தில் பதுங்கியிருந்த கர்ணனையும் காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இவ்வாறு கைதான 4 பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.