மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் ஏறி சென்று வாலிபர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் தோட்டராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிக்கும் ஜோதிலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தோட்டராஜா ராமநாதபுரம் மகா சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி மகாலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்து தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தோட்டராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆர்.எஸ்.மடை பகுதியில் மது அருந்தியுள்ளார். அப்போது நண்பர்கள் வெங்கடேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் தோட்டராஜாவிடம் தாங்கள் மது விற்பனை செய்வது குறித்து காவல்துறையினருக்கு ஏன் தகவல் தெரிவித்தாய் என்று கண்டித்துள்ளனர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தோட்டாராஜாவின் மோட்டார் சைக்கிளை 2 மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் தோட்டராஜா காவல்துறையினரிடம் தெரிவித்ததால் தான் மோட்டார் சைக்கிளை பறித்து சென்று விட்டதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தோட்டாராஜா ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புதிய கட்டிடத்தின் மாடியில் ஏறி அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீ வைத்து மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூச்சலிட்டுள்ளார்.
இதனைபார்த்த அப்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து அவரைக் கீழே இறங்கி வரும்படி கூறினர். அதற்கு தோட்டராஜா மறுத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினார். இதனையடுத்து காவல்துறையினர் தோட்டராஜாவிடம் நைசாக சென்று பேசி மீட்டு கீழே கொண்டு வந்தனர். அதன்பின் அவரது உடலில் பெட்ரோல் ஊற்றப்பட்டிருந்ததால் தண்ணீரை ஊற்றினர். இதனைதொடர்ந்து கேணிக்கரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.