கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வெற்றி பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி சார்பில் எச். வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு காரணத்தினால் காலமானார். இதனால் சட்டசபை பொதுத் தேர்தலோடு, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பாக மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரின் மகன் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான விஜய் வசந்த் போட்டியிட்டுள்ளார்.
இவர்களை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டுள்ளார். இவர்களைத் தவிர நாம் தமிழர் கட்சி சார்பாக அனிட்டர் ஆல்வின் போட்டியிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் சுபா, சார்லஸ் சேர்த்து பத்து பேர் போட்டியிட்டுள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட நேரத்தில் இருந்தே விஜய் வசந்த் முன்னிலை வகித்து வந்துள்ளார்.
இதன் காரணமாக தன்னை எதிர்த்து போட்டியிட்ட பொன்ராதாகிருஷ்ணன் விட சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் வசந்த் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 5 லட்சத்து 67 ஆயிரத்து 280 வாக்குகள் பெற்றிருந்தார். பொன் ராதாகிருஷ்ணன் 4 லட்சத்து 32 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று பின் நிலையில் இருந்துள்ளார். இதனால் பொன் ராதா கிருஷ்ணனை விட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனிட்டர் ஆல்வின் 52 ஆயிரத்து 221 வாக்குகளும், சுபா சார்லஸ் 8,44 7 வாக்குகளும் பெற்றிருந்தனர்.