வார்னிஷை தீயில் ஊற்றி குளிர் காய்ந்ததில் மூச்சு திணறி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இயல்பு நிலையைக் காட்டிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.அதன் காரணமாக அம்பிகாபுரத்தை சேர்ந்த கஜபதி என்பவர் தனது உறவினர்கள் கலாவதி, மகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டிற்குள் தீயை மூட்டி குளிர் காய்ந்துள்ளார். அத்துடன் அவர் தீ நன்றாக எரிய வேண்டும் என்பதற்காக அவர் நெருப்பில் வார்னிஷை ஊற்றியுள்ளார். அதன் விளைவாக புகை வீடு முழுவதும் பரவியுள்ளது.
இதனால் அவர்கள் மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தனர். வீட்டிலிருந்து அதிகளவு புகை வெளியேறுவதை கவனித்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். கஜபதி மற்றும் மகேந்திரனுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.