உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்காவை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரீம்ஷாதக்கா பகுதியில் இருக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் பூங்காவை முறையாக பராமரிப்பதற்கும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் 28 சென்ட் பரப்பளவில் இருக்கும் கல்வட்டக்குழி இடத்தை ஆய்வு செய்த கலெக்டர் தனி நபர் எத்தனை பேர் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள் பற்றியும் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகத்துக்கு இந்த இடத்திற்கும் எவ்வளவு தொலைவு என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துள்ளார்.
அதன்பின் அங்குள்ள பழைய பெட்ரோல் பங்க் அமைந்திருந்த இடத்தையும் கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக கிராம சேவை மைய கட்டிடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தீயணைப்பு நிலையத்திற்கு புதியதாக கட்டிடம் கட்டுவதற்கு வருவாய்த் துறையினரின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.