கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட காய்கறி தோட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் கலெக்டர் ரவிக்குமார் ஆகியோர் பள்ளி வளாகங்களில் சத்தான காய்கறி மற்றும் கீரை வகைகள் பயிரிடப்பட்டு காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். ஏனெனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்வழி இறப்பு விகிதம் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்துக் குறைவு போன்ற நோய்கள் அதிகரித்ததால் கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாக்கும் பொருட்டு குழந்தைகளுக்கு பள்ளி பருவத்திலேயே கருவேப்பிலை, கீரைகள், வெண்டைக்காய், தக்காளி போன்ற உணவுகளை வகைகளை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதன் காரணமாகவே காய்கறிகள் மற்றும் கீரை தோட்டம் அமைக்கப்படுகிறது. அதன்படி ஒரு சென்ட் நிலத்தில் வேலிகள் அமைக்கப்பட்டு திருவாடானை யூனியனில் 47 ஊராட்சிகளில் உள்ள பள்ளி வளாகங்களில் 100 காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி தோட்டத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நன்கு வளர்ந்துள்ள காய்கறிகள், கீரைகள் மற்றும் மரங்களை திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாமியா நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் அமைக்கப்பட்ட காய்கறி தோட்டத்தில் உள்ள காய்கறி மற்றும் கீரைகள் நன்கு வளர்ந்துள்ளது எனவும், அங்கு குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இதற்கான உலக சாதனை விருது ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவ்வாறு காய்கறி தோட்டங்களை அமைப்பதன் மூலம் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் பயன்பெறுவதோடு, தாய்வழி இறப்பு விகிதம் குறையவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி வளாகத்தில் கூடுதல் காய்கறி தோட்டங்களை அமைப்பதற்கு அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.