ஈரானுக்கு தேவையான மருந்து வாங்குவதற்கு பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி (Hassan Rouhani) கோரியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் மொத்தம் 3225 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வேகமாக பரவி வரும் நாடுகளுள் ஓன்று ஈரான். இந்நாட்டில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 92ஆக வும், நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822ஆகவும் உயர்ந்துள்ளது. ஈரான் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
முன்னதாக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் ஈரான், மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேவையான பொருட்கள் மற்றும் மருந்து வாங்குவதற்கான தடைகளை உடனடியாக நீக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் ஹசன் ரூஹானி கூறுகையில், ‘கொரோனா நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு மத்தியில் போலி செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றது. முடிந்த அளவு நாங்கள் (ஈரான்) விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோம்’ என கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றார். காரணம் உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கடத்தலுக்கு உதவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மேலும் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பொருளாதார தண்டனையாக, ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.