கொரோனா வைரஸ் தாக்கத்தால் அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரசின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8, 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் பேசினார். அப்போது அவர், அடுத்த இரண்டு வாரங்களில் பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நேரும் என அச்சம் தெரிவித்து, இதற்கு சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ஈடுபடுத்த இருப்பதாகவும், ராணுவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட 1000 பேர் நியுயார்க் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.