உலகை மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுவரையில் மொத்தம் 4,025 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,088 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்காவில் கொடிய கொரோனாவால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இதுதவிர கொரோனா வைரஸ் வைரஸ் அமெரிக்காவின் 36 மாநிலங்களில் வேகமாக பரவி வருவதால் மேலும் நியூயார்க், கலிபோர்னியா மற்றும் ஒரேகான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் சுகாதார அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகை ஊழியர்களின் குழு தலைவரும், வட கரோலினா பிரதிநிதியுமான மார்க் மெடோஸ் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள ஒரு நபருடன் அவர் தொடர்பு கொண்டிருந்ததால் அவருக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அவர் புதன்கிழமை வரை வீட்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்.