உய்கர் இஸ்லாமியர்கள் மீது சீன அரசு வன்முறைகளை மேற்கொண்டு வருவதால் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது
உய்கர் இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நாட்டின் அதிபரான ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் சீன நாட்டின் சிறுபான்மையினரான உய்கர் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் அரசு மற்றும் அதன் அலுவலர்கள் மீது தடைகளை பிறப்பிக்க முடியும். சீனாவில் இருக்கும் சிறுபான்மை பிரிவினரான உய்கர் இஸ்லாமியர்கள் மீது சீன அரசு தொடர்ந்து வன்முறைகளை நடத்தியும் கட்டுப்பாடுகளை விதித்தும் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. சீனாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் சின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.
சீன அதிபர் தலைமையிலான அரசு அவர்களின் தனித்துவத்தை மாற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில் ஏராளமான இஸ்லாமியர்களை முகாம்களில் அடைத்து தொடர்ந்து வன்முறை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகின்றது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு, வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் ஏற்கனவே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.