உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிட்னியில் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த வைரஸானது ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியா நாட்டில் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. மேலும் குயின்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா போன்ற மாகாணங்களிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்துள்ளது. இதில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 262 ஆகும். இதனால் சிட்னியில் ஒரு மாத காலமாக பொது முடக்கம் அமலில் இருந்தும் உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறைந்ததாக தெரியவில்லை.
இதுகுறித்து நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சுகாதார விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் மக்கள் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒருவருக்கு இதுவரை அறியப்படாத புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த நகரில் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.