சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த ஒரு பெண் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கோவையில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் எனக்கு திருமணம் நடைபெற்றது. என்னுடைய விருப்பமில்லாமல் எனக்கு திருமணம் நடந்தது. எனவே என்னுடைய திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்த போது திருமணத்தை பதிவு செய்யாவிட்டாலும் திருமணம் நடந்து முடிந்தது என்பதை மாற்ற முடியாது.
நீதிமன்ற உத்தரவின் படி தான் திருமணத்தை ரத்து செய்ய முடியும் என்பதால், மனுதாரர் கூறியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் விருப்பமில்லாத திருமணத்தை பதிவு செய்ததால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் திருமணத்தை ரத்து செய்யக் கூறி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.