திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 1 ½ வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே உள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மோகனா. பிரபாகரன் பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வர மோகனா வீட்டில் இருந்து தனது ஒன்றரை வயது குழந்தையை பார்த்துக் கொள்வார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பாலாஜி நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கணவன் மற்றும் குழந்தையுடன் சென்றார்.
பொங்கல் பண்டிகை முடிந்ததும் வீட்டிற்கு வர மனமில்லாமல் சிறிது நாள் இங்கேயே இருக்கலாம் என்று கூற பிரபாகரன் மட்டும் வேலைக்குச் சென்று தன் மாமனார் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவ்வாறு இருக்கையில் நேற்றையதினம் மோகனா குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடிக்கு துணி துவைக்க சென்றிருந்தார். அங்கே வீட்டில் அவரது தாயான கோகிலா குழந்தையை அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.
இதையடுத்து சோப்பு பவுடர் காலியாக கடைக்கு போய் வாங்கி வருமாறு தாய் கோகிலாவை அனுப்பி உள்ளார் மோகனா. இதையடுத்து குழந்தை அருகில் யாரும் இல்லாத நிலையில், கோகிலா திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. சந்தேகமடைந்து குளியல் அறையில் பார்க்கும்போது தண்ணீர் நிறைந்த வாளியில் குழந்தை தலைகீழாக கவிழ்ந்து இருந்தது.
இதை பார்த்து பதறி அடித்து இருவரும் குழந்தையை உடனடியாக தூக்கிக் கொண்டு பல்லடம் தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் குழந்தையின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதித்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு தூக்கம் கலைந்து எழுந்து திறக்கப்பட்டு இருந்த பாத்ரூமிற்குள் சென்று அங்கு வாளியில் தண்ணீர் இருப்பதை கண்டு அடித்து விளையாடியுள்ளது. பின் எதிர்பாராதவிதமாக வழுக்கி வாளிக்குள் விழுந்து மூச்சு திணறி குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.