டாஸ்மாக் கடை விற்பனையாளர் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்து தச்சன்புதூர் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் சிவகுமார் விற்பனையை முடித்துவிட்டு டாஸ்மாக் கடையை பூட்டியுள்ளார். அதன்பின் மதுபாட்டில்களை விற்பனை செய்ததற்கான தொகை 1 லட்சத்து 12 ஆயிரத்து 310 ரூபாய் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு தாராபுரம் நோக்கி வந்துள்ளார். அப்போது இவர் மோட்டார் சைக்கிளில் அச்சன்புதூர் பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மூன்று பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு சிவகுமார் மறுப்பு தெரிவித்ததால், கோபமடைந்த அந்த மர்ம நபர்கள் அருகில் இருந்த மது பாட்டில்களை எடுத்து சிவகுமாரின் தலையில் தாக்கி விட்டனர். இதனையடுத்து அவர் வைத்திருந்த ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 31௦ ரூபாயை மர்ம நபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு சிவகுமார் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பலத்த காயத்துடன் இருந்த சிவகுமாரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவக்குமாரை தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.