மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, மாநில தலைமை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தொற்று எந்த அளவில் பரவி உள்ளது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், பொதுமக்கள் நடமாட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள் என்பது தொடர்பான விஷயங்கள் தமிழக அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது, காவல்துறை பணிகள் குறித்தும், இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் டிஜிபி திரிபாதி விளக்கமளித்துள்ளார். இதுபோன்று அனைத்து மாநிலங்களிலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.