அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது. அமேரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27.44 லட்சம் (2,744,614) ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை (191,791) 1.91 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 55 ஆயிரத்து 443 ஆக அதிகரித்துள்ளது. அதில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்க மட்டும் தான். தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 85,922 பேர் குணமடைந்துள்ளனர்.
50,243 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா ஒருபுறம் வாட்டும் நிலையில், வேலையின்மையும் மக்களை வறுத்தெடுக்கிறது. வேலையை இழந்து அதற்கான உதவித்தொகை கேட்டு அரசிடம் பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் மட்டும், சுமார் 44 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அமெரிக்காவில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 20% அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.