முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் கார்த்தி. பாமக கட்சியைச் சேர்ந்த கார்த்தி வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஆக இருக்கிறார். இவருடைய வீட்டு திருமண நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு திருமணத்தன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் சென்று திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளார்.
இந்த திருமண விழாவில் பாமக கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமணம் நடந்த நாளில் பாமக கட்சியை சேர்ந்த 50 பேர் எடப்பாடியின் தலைமையில் அதிமுகவில் இணைய அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி எடப்பாடி வரவேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் வைத்து நடந்துள்ளது. இந்நிலையில் பாமகவை சேர்ந்த ஒன்றிய மாணவர் அணி துணை செயலாளர் முருகேசன் மற்றும் மீனவர் அணி செயலாளர் ஜவகர் ஆகியோர் தலைமையில் தான் அதிமுகவில் 50 பேர் இணைந்துள்ளனர்.
இதற்கெல்லாம் காரணம் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜுதான் என்று கூறப்படுகிறது. இவர் தான் சீக்ரட்டான முறையில் காய்களை நகர்த்தி பாமகவினரை தங்கள் கட்சிப் பக்கம் இழுத்து வந்தாராம். மேலும் பாமக கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் வந்த அதே நாளில் கட்சியை சேர்ந்த 50 பேர் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு கூட்டணியில் விரிசல் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.