உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை சீரழிக்க காத்திருப்பவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சுவிஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய வீரர்களிடமிருந்து தங்கள் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனில் இருந்து வருபவர்களிடம் தங்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறி சீரழிக்க காத்திருப்பவர்களும், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சியிலும் கடத்தல்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் மானத்தை காப்பாற்றி கொள்ள பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இதற்கிடையில் அகதிகளாக பிரித்தானியாவுக்கு வரும் மற்றும் வந்துள்ள இளம் பெண்களை பயன்படுத்திக்கொள்ள காத்திருக்கும் ஆண்களைக் குறிவைத்து செய்திகள் வெளியாகி பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதேபோல் ஒரு நிலைமை அகதிகளாக உக்ரைனில் இருந்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சுவிட்சர்லாந்து அரசு கவனமாக இருக்கிறது. இது தொடர்பாக சுவிஸ் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களின் பாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி குறிப்பாக பெண்களையும் சிறு பிள்ளைகளையும் சீரழிக்க காத்திருக்கம் நபர்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும். யாரேனும் உதவி செய்கிறோம் அல்லது வேலை வாங்கித் தருகிறோம் என்று ஆசை காட்டினால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். மேலும் அரசு அதிகாரிகளிடம் மட்டுமே பயண ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து அகதிகளாக வருபவர்கள் தங்களின் அடையாள ஆவணங்களை புகைப்படம் எடுத்து அவற்றின் நகல்களையும் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதை குறித்த விஷயங்களை தங்கள் நம்பிக்கைக்கு உரிய நபர்களிடம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கடையில் யாருக்காவது பிரச்சனை அல்லது பாதுகாப்பின்மை குறித்து அச்சம் ஏற்பட்டாலும் அருகிலுள்ள புகலிடம் மையங்கள் உள்ள அதிகாரிகளை அணுகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கடத்தல் அல்லது பிரயோகத்தில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று அந்நாட்டு அரசு இணையதளங்களில் பல்வேறு மொழிகளில் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.