ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட கெர்சன் நகரின் பெரிய பகுதிகளை உக்ரைன் படையினர் மீண்டும் மீட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உச்சகட்டமாக, ரஷ்யபடையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் நான்கு முக்கிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ரஷ்ய அதிபர் வெளியிட்டார்.
மேலும், ரஷ்ய படையினருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதங்களை தயக்கமின்றி பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் உக்ரைன் படையினர் கெர்சன் நகரில் இருக்கும் 400 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை உக்ரைன் படையினர் கெர்சன் நகரின் 400 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட பகுதிகளை விடுவித்துள்ளதாக அந்நாட்டின் தெற்கு ராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.