உக்ரைனில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அதை மீறினால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கையை கடுமையாயக எதிர்த்து வருகின்றன. மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் போரை நிறுத்த உத்தரவிடுமாறு, நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் கோரியிருந்தது. அதன்படி சர்வதேச நீதிமன்றம் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவிற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் அதிபர் செலன்ஸ்கி, இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கிறார். மேலும் இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் உலக நாடுகளிடம், ரஷ்ய நாடு தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.