ஓட்டல் உரிமையாளர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சாலையில் அந்தப் பகுதியில் வசித்து வரும் பாபுபாயும் அவரது மகன் அயாஸ் ஆகிய இருவரும் சேர்ந்து ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அணைக்கட்டு தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் பள்ளிகொண்டா பஜார் வீதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாபுபாய் கடையில் உள்ள ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் பணி செய்து கொண்டு இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஓட்டல் உரிமையாளர் பாபுபாயை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் அவர் முககவசம் அணியாததால் 200 ரூபாய் அபராதம் விதிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாபுபாய் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் ஒருவர் கடைக்கு சீல் வைத்து விடுவதாக கூறியுள்ளார். அதன்பின் பாபுபாய் விற்பதற்காக வைத்திருந்த இனிப்பு மற்றும் கார வகைகளை கீழே கொட்டி அழித்தார். மேலும் பாபுபாய் அபராதம் விதிப்பதாகவும் சீல் வைப்பதாகவும் காவல்துறையினர் மிரட்டுவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதேபோன்று அவர் மீது தேர்தல் துணை தாசில்தார் ராஜ்குமார், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர். இதனைதொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் அதிகாரிகளையும், ஓட்டல் உரிமையாளரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பாபுவின் மகன் அயாஸ் அங்கு சென்று வாரத்திற்கு 2 முறை அதிகாரிகள் வந்து தொல்லை கொடுப்பதாகவும், அபராதம் விதிப்பதாக மிரட்டி வருவதாக கூறி திடீரென்று கையில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அங்கிருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை தடுத்தனர். எனவே பெட்ரோல் ஊற்றியதால் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு அயாஸ் வலியால் துடித்தார். அதன்பின் காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த தேர்தல் துணை தாசில்தார் ராஜ்குமார் யார் மீதும் வழக்குபதிவு செய்ய வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.