டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸியின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் இரு டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா உட்பட 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கிய முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் கீலாங் மைதானத்தில் மோதியது. இதில் முதலில் ஆடிய நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்தது. பின் ஆடிய இலங்கை அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் அதே மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோத உள்ளது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக கேப்டன் சி.பி ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடக்க வீரர்களான சிராக் சூரி மற்றும் முஹம்மது வசீம் ஆகிய இருவரும் களமிறங்கினர். இதில் தொடக்க வீரர் சிராக் சூரி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து வந்த காஷிப் தாவுத் 15, விருத்தியா அரவிந்த் 18, ஜாவர் ஃபரித் 2, பாசில் ஹமீது 4, கேப்டன் சி.பி ரிஸ்வான் 1, அயன் அப்சல் கான் 5 என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.. இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் முஹம்மது வசீம் பொறுமையாக ஆடி 41 (47) ரன்கள் எடுத்ததால் யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 3 விக்கெட்டுகளும், பிரெட் கிளாசென் 2 விக்கெட்டுக்களும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 10 ஓவர் முடிவில் 63/3 என விளையாடி வருகிறது.