தட்டச்சர் பணிக்கான இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு 197 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். வரும் 22ஆம் தேதி அவர்களுக்கான பணி இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்த கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்தாய்விற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்களில் தட்டச்சர் பணியை தேர்வு செய்தவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.